1. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?
இப்பொழுதான் அந்த வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து பிரிட்டன் மெல்ல மீண்டு வருகிற நிலையில், பொருளாதார வீழ்ச்சி தாக்கம் மற்றும் இதர காரணங்களால் பிரிட்டனில் இன்னமும் வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 25 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!
இந்நிலையில் அயல்நாடுகளிலிருந்து வேலை தேடி வருவோர்களுக்கு எதிராக எப்பொழுதுமே கடுமையாக பேசி வரும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் டேமியன் கிரீன், குறைந்த கல்வி தகுதியுடைய வேலைகளை தேடி அயல்நாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வரவேண்டாம் என்றும், அத்தகைய வேலைகளை செய்ய பிரிட்டனிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உள்ளதாகவும், மிக உயர் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இங்கு ஓரளவு வேலை வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும் தங்கள் நாடு குறைந்த கல்வி தகுதியுடையவர்களுக்கு, - கிட்டத்தட்ட கூலியாட்கள் - வேலை அளிக்கும் சந்தை கிடையாது என்றும் அவர் காட்டம் காட்டியுள்ளார். இந்த ரக தொழிலாளர்கள் வருவதை தடுப்பதற்குதான், கடந்த 2008 ஆம் ஆண்டில், முந்தைய தொழிலாளர் கட்சி அரசு வேலை தேடி வருபவர்களுக்கு அவர்களது திறமையின் அடிப்படையில், புள்ளிகள் அடிப்படையிலான Tier-1 கிரேடு முறையை கொண்டுவந்தது. சிறந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான ஒரு யுக்தியாகவும் இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த மற்றும் படித்து முடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுகொண்டிருந்த இந்திய மாணவர்களும் மேற்கூறிய Tier-1 கிரேடு முறைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் தங்களுக்கான பணி அனுபவத்தை பெற மேலும் இரண்டாண்டுகள் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது பணி திறமைகளை அதிகரித்துக்கொள்வதோடு, அயல்நாட்டவர்கள் இங்கிலாந்தில்
பணியாற்ற அதிகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழித்திறனுக்கு ஏற்ப, தங்களது தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆங்கில மொழித்திறன் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் குறைந்துபோன வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால்தான், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வெளியே வந்த இந்திய எம்.பி.ஏ. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், வேலை
இன்றி தவிப்பதோடு, பிழைப்பை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஓட்டல்களிலும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
இன்று லண்டனிலுள்ள ஓட்டல்களில் ஒரு சுற்று சுற்றி வந்தால், பாதிக்கும் அதிகமான் ஓட்டல்களில் இந்தியாவை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த பலர் "வெயிட்டர்"களாக பணியாற்றுவதை பார்க்கலாம் என்கிறார் சுல்தானா என்ற இந்திய மாணவி.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.பி.ஏ. முடித்தவர்.வேலை கிடைக்காமல் ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றுகிறார். துரதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்ததுபோன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை.அதனால்தான் நான் ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றுகிறேன்.நான் மட்டுமல்ல; என்னுடன் படித்த எனது நண்பர்கள் ஏராளனமானோரும் என்னைப்போன்றே அவர்களது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் ஓட்டல்களில் வெயிட்டர்களாக பணியாற்றுகிறார்கள்.சிலர் இரவு நேர செக்யூரிட்டி பணியாளர்களாகவும் வேலை பார்க்கிறார்கள்" என்று துயரத்துடன் கூறுகிறார். ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா இனவெறியை காண்பித்து இந்திய மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கையில், தற்போது பிரிட்டனும் பயமுறுத்துகிறது. எனவே டாலர்களில் சம்பளம் வாங்கும் கனவில் அயல்நாடுகளுக்கு படிக்கவும் , படித்து முடித்து பணிக்கும் செல்ல நினைப்பவர்கள், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?" என்று தங்களுக்குள் கேட்டு யோசித்துவிட்டு, அதன் பின்னர் முடிவெடுப்பது நல்லது.
----------------------------------------------
2. புதிய வடிவில் மோசடி இ மெயில்கள்!
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள். இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.
இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள். கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள். பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள். ர்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.
அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும். அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).
ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HRபிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம். அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள